மன விரக்தினால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூப்பன்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கருணாநிதி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மாலா தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகேயன் மற்றும் நிரஞ்சன் முத்தரசன் என்ற 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி கொரோனா முழு ஊரடங்கினால் வேலை இல்லாமல் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் கருணாநிதி அங்கு சென்றும் வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கருணாநிதிக்கும், அவரின் மனைவியான மாலா தேவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கருணாநிதி மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் கருணாநிதி அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற சிலர் கருணாநிதியின் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததைப் பார்த்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று கருணாநிதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.