இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள வெற்றியூர் கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல்காந்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிமென்ட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராகுல்காந்தி வேலை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கீழப்பழுவூர் நெடுஞ்சாலை பகுதியில் வேகமாக வந்த லாரியானது ராகுல்காந்தியின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதனையடுத்து லாரியின் டயரானது கீழே விழுந்த ராகுல்காந்தியின் மேலே ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராகுல்காந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.