ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றும், அரசு எப்படி செயல்படுகிறது என்பது தெரியாது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வர அமெரிக்கா லண்டன், துபாய் என 13 நாட்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். முதல்வரின் இந்த பயணம் குறித்து ஸ்டாலின் முதல்வர் வெறுங்கையுடன் திரும்பியதாக விமர்சனம் செய்தார். பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, “திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன?. மு.க.ஸ்டாலின் கூறுவது அனைத்தும் பொய். தமிழகத்தில் புதிதாக 29 தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. பெரிய தொழில்கள் தொடங்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும் என்றார்.
மேலும் தமிழக அரசை பாராட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை. திமுக ஆட்சியில் தொழில் முதலீடு ரூ.26,000 கோடி தான். ஆனால் அதிமுக ஆட்சியில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. குறுகிய எண்ணம் படைத்தவர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். திமுக ஆட்சியின் போது எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன?
அரசு எப்படி செயல்படுகிறது என்பது ஸ்டாலினுக்கு தெரியாது. அவருக்கு அதில் ஈடுபாடும் இல்லை. உலக நாடுகளுக்கு சென்று பார்வையிட்டால் தான் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியும். மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுக்குரியதுதான். அதிமுக செய்துவரும் வளர்ச்சித் திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்னும் பல தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு மாநில முதல்வர்களும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலத்தை முன்னேற்றி வருகிறார்கள். வெளிநாட்டை போன்று தமிழகத்திலும் ஒரே இடத்தில் பால் சேகரிக்கும் முறை ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி இல்லை. தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. என்னுடைய வெளிநாட்டுப் பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
மத்திய அரசு நல்ல திட்டங்களை அறிவித்தால் ஆதரிப்போம். மோட்டார் வாகன சட்டத்தை பரிசீலனை செய்து முறையாக அமல்படுத்தப்படும். உலக நாடுகளுக்கு சென்று பார்வையிட்டால் தான் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியும். முதலீட்டாளர்களுக்கு நேரில் சென்று தெளிவு படுத்தினால் தான் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்று தெரிவித்தார்.