Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

25 சதவீத ஒதுக்கீட்டில்…. இன்று முதல் ஆரம்பம்…. குலுக்கல் முறையில் தேர்வு….!!

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 2009 பிரிவு 12 (1) சி-யின்படி சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி அல்லது 1-ம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 2021- 2022 ஆம் ஆண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி அல்லது 1-ம் வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர விருப்பப்படுபவர்கள் https://rte.tnschoolsgov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியது.

எனவே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு விரும்பும் பெற்றோர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்து இருந்தால் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் விவரங்களை இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட விவரங்களை பள்ளி அறிவிப்புப் பலகையிலும், பள்ளிகல்வித்துறை இணையதளத்தில் வெளியிடவேண்டும்.

இந்த நடைமுறையில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அறிவிக்கலாம் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளர் தாமோதரன் கூறும்போது, பெற்றோர்களின் புகார் அல்லது ஆலோசனைகள் பெற விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும்  மாநில அளவில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் அல்லது தொடக்கக் கல்வி இயக்குனரிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |