மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பட்டதாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திட்டுவிளையில் ஷெல்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிநயா என்ஜினீயரிங் பட்டதாரியாக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அபிநயாவின் சொந்த ஊர் பரப்புவிளை ஆகும். அங்கு அபிநயாவின் தாயாரும், சகோதரியும் உடல்நலகுறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்நிலையில் அவர்களை கவனித்துக் கொள்வதற்காக அபிநயா பரப்புவிளையில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார்.
அப்போது அபிநயா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது சகோதரியை பார்ப்பதற்காக சென்று கொண்டிருக்கும் போது பாம்பன்விளை பகுதியில் அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் தூக்கி எறியப்பட்ட அபிநயா படுகாயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அபிநயாவின் சகோதரர் சபரீஷ் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நிற்காமல் சென்ற வாகன ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.