ஸ்கூட்டர் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலக்குறிச்சி சாஸ்தாகோவில் தெருவில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகராஜ் தனது மனைவியின் ஸ்கூட்டரில் பெட்ரோல் நிரப்புவதற்காக திருவனந்தபுரம்- நாகர்கோவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தலைமை தபால் நிலையம் பகுதியில் சென்றபோது எதிரே தூத்துக்குடியிலிருந்து பாமாயில் ஏற்றிவந்த டெம்போ திடீரென நாகராஜ் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியதோடு அப்பகுதியிலுள்ள காம்பவுண்டு சுவரில் மோதி நின்றது.
இதில் நாகராஜ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் டெம்போவை அப்புறப்படுத்தி நாகராஜன் சடலத்தை மீட்டனர். இதனையடுத்து நாகராஜின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து தக்கலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டெம்போவை ஓட்டிவந்த நாகர்கோவில் வெள்ளமடம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.