மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த லோகித் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தைக்கு தெரியாமல் லோகித் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனது நண்பர்களை பார்க்க சென்றுள்ளார். இதனையடுத்து அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக லோகித்தின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அங்கிருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதி விட்டது.
இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லோகித் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.