முயல் வேட்டைக்கு சென்ற வாலிபர் மீது துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகின்றார். இவர் முயல் வேட்டைக்காக கோட்டைபூஞ்சை அருகே துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற 3 பேர் முத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 3 பேரும் சேர்ந்து முத்துவின் துப்பாக்கியை பறித்து அவரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் படுகாயமடைந்த முத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து அச்சரபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோட்டைபுஞ்சை கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், சதீஸ், மோகன்தாஸ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் 3 பேரும் முத்துவை துப்பாக்கியால் சுட்டது தாங்கள்தான் என்று ஒப்புக்கொண்டனர். அதன்பின் 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரகாந்தம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். இதனைதொடர்ந்து முத்துவிடம் இருந்து பறிக்கப்பட்ட அந்த துப்பாக்கி ஏரியில் வீசியதாக கூறியதால் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தும் கிடைக்கவில்லை.