சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புலித்தோலை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரமத்தில் புலித்தோலை மறைத்து வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி
வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் புலி தோல்கள், புள்ளிமான் தோல்கள், மயில் தோகைகள் ஆகியவை சிக்கியுள்ளன.
இதனையடுத்து ஆசிரமத்தின் ஊழியரை பிடித்து விசாரித்த போது அவர் தனக்கு எதுவும் தெரியாது எனவும் ஆசிரமத்தின் சாமியாரிடம் விசாரிக்குமாறு கூறியுள்ளார். அதன்பின் அந்த சாமியாரை வனத்துறை அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அங்கு வருவதாக கூறிய சாமியார் திடீரென தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.