இந்தியாவில் பிறந்த பெண், அமெரிக்காவில் பட்டம் பெற்று, தற்போது விண்வெளி பயணம் மேற்கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன், விர்ஜின் கேலடிக் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தை நிறுவினார். தற்போது இந்நிறுவனமானது, வரும் 11ஆம் தேதியன்று முதல் சோதனை பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 5 நபர்கள் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு முதன் முதலாக பயணிக்கவுள்ளார்கள்.
இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்த சிரிஷா பாண்ட்லா என்ற பெண்ணும் இருக்கிறார். இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட முதல் பெண் கல்பனா சாவ்லா. அவரை தொடர்ந்து, இரண்டாவது பெண்ணாக இந்தியாவில் பிறந்த சிரிஷாவும் தற்போது விண்வெளிக்கு செல்லவுள்ளார்.
இந்நிறுவனத்தின் நிறுவனரான ரிச்சர்ட் பிரான்சன் தலைமையேற்று இந்த பயணத்தை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. சிரிஷா ஆந்திராவில் உள்ள குண்டூரில் பிறந்திருக்கிறார். எனினும் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் தான் வளர்ந்துள்ளார். அங்கேயே கல்வியை முடித்து பர்டூ ஏரோநாட்டிகல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார்.
கடந்த 2015 ஆம் வருடத்தில், விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருக்கிறார். தற்போது இந்நிறுவனத்தின் அரசு விவகாரங்களுக்கான துணை தலைவராக இருக்கிறார். எனவே இணையதளங்களில் இந்தியாவிற்கு பெருமை கிடைக்கப்போவதாக சிரிஷாவை பலரும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.