Categories
வேலூர்

மாயமான பசுமாடு…. கையும் களவுமாக மாட்டிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

விமானத்தில் வந்து மாடு திருடும் தொழிலில் ஈடுபட்ட அரியானாவை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு டவுன் புதுவீதியில் ரசாக் என்ற மாட்டு வியாபாரி வசித்து வருகின்றார். இவர் வளர்த்து வந்த பசுமாட்டை ஏரிகுத்தி கிராமத்தில் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் மாடு வீடு திரும்பாததால் ரசாக் தனது பசுமாட்டை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரசாக் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் வீ.கோட்டா ரோடு சந்திப்பு சாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவை நோக்கி சென்ற ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை நடத்தியதில் ஒரு பசுமாடு இருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மினி லாரியை ஓட்டிச் சென்றவர் இந்தியில் பேசியதால் காவல்துறையினர் இந்தி தெரிந்த நபர்கள் மூலம் அவரிடம் பேசி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அரியானா மாநிலம் ஜமால்தார் கிராமத்தைச் சேர்ந்த அக்முதீன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் டெல்லியிலிருந்து அடிக்கடி பெங்களூருக்கு விமானத்தில் வந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனது நண்பரும் ஷாகில் என்பவரிடமும் வாகனத்தை பெற்று போலி பதிவினை பயன்படுத்தி மாடுகளை திருடி விற்கும் செயலில் ஈடுபட்டதும், இதுவரை ஆந்திர மாநிலத்துக்கு 20-க்கும் மேற்பட்ட மாடுகளை திருடி இறைச்சி கடைகளில் விற்று பணம் சம்பாதித்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து ஏரிகுத்தி கிராமத்தில் வந்து தனியாக மேய்ந்து கொண்டிருந்த ரசாக்கிற்கு சொந்தமான பசுமாட்டை திருடிச்சென்று வனப்பகுதியில் மறைவாக நிறுத்தி வைத்து, அதிகாலையில் பசு மாடுடன் தப்பிச் செல்ல முயன்ற போது காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதன்பின் அவரிடமிருந்து பசுமாடு, போலி பதிவெண் கொண்ட மினி லாரி, திருடி விற்ற பணம் 70 ஆயிரத்து 800 ரூபாய் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு அக்முதீனை கைது செய்து குடியாத்தம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

Categories

Tech |