அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பணியின்போது தகராறு ஏற்பட்டதில் சக ஊழியர்கள் 5 பேரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டல்லாஹஸ்ஸி (Tallahassee) நகரத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் அன்ட்வான் பிரவுன் (Antwann Brown) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பணியின்போது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சக ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி வெளியே சென்ற பிரவுன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 5 பணியாளர்களையும் ஆத்திரத்தில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாகவும், 4 பேர் சிறிய காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து போலீசார் அவனை தேடி வந்த நிலையில் சம்பவ இடத்துக்கு அருகிலேயே பதுங்கி இருந்த பிரவுனைஅவர்கள் கைது செய்தனர். ஏற்கனவே போதைப்பொருள் வைத்திருத்தல், திருட்டு சம்பவம், வன்முறை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பிரவுன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.