ஓ.என்.ஜி.சி. குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட நிலத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேலப்பனையூர் கிராமத்தில் சிவகுமார் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான விளைநிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி. குழாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியதால் வயலில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஓ.என்.ஜி.சி. முதன்மை பொது மேலாளர் மாறன், நல்லூர் பாதுகாப்பு அதிகாரி விஜயராகவன், செயற்பொறியாளர் பரமேஸ்வரன் போன்ற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயி சிவக்குமாரை சந்தித்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தருவதாகவும், விளை நிலத்தை தாங்களே சீரமைத்து தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஓ.என்.ஜி.சி. குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட நிலத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது. அதன்பின் பொக்லைன் எந்திரம் மற்றும் 7 டிராக்டர்களை கொண்டு சீரமைக்கும் பணி நடைபெற்று இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.