சூயஸ் கால்வாயில் எகிப்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த எவர் கிவன் சரக்கு கப்பல் ஜூலை மாதம் 7ஆம் தேதி விடுவிக்கப்படவுள்ளது.
எவர் கிவன் ஜப்பானிய சரக்குக் கப்பல் கடந்த மாதம் மார்ச் 23ஆம் தேதி அன்று சூயஸ் கால்வாயை கடக்க முயற்சித்தப் போது தரைதட்டி நின்றுள்ளது. இந்தக் கப்பல் சுமார் ஒரு வாரகாலமாக அங்கேயே நின்றதால் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் பல கப்பல்கள் திணறின. இதனால் போக்குவரத்து தடைப்பட்டதால் எகிப்தின் பொருளாதாரத்தில் நாளொன்றுக்கு சுமார் 12 மில்லியன் முதல் 15 மில்லியன் டாலர் வரை வருமானத்தை இழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் கப்பலை மீண்டும் மிதக்க வைத்தல் மற்றும் கப்பலை சீரமைக்கும் பணிகள் போன்றவற்றிற்கான செலவுகளுக்கு இழப்பீடு கோரியும் எகிப்து அதிகாரிகள் கப்பலை பறிமுதல் செய்து வைத்திருந்தனர். இந்த பொருளாதார இழப்பை சரிக்கட்டுவதற்கு எகிப்து அதிகாரிகள் எவர் கிவன் சரக்கு கப்பலின் உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் 900 மில்லியன் இழப்பீடு கேட்ட எகிப்து தற்பொழுது 550 மில்லியன் டாலருக்கு இறங்கியுள்ளது. இந்நிலையில் எவர் கிவன் கப்பல் ஜூலை 7 ஆம் தேதி சூயஸ் கால்வாயிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.