மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே கணவருக்கு மனைவியைப் பிடிக்காமல் போய்விட்டது. இதனால் அவருடன் சேர்ந்து வாழாமல் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி வேறு ஊரில் வாழ்ந்து வந்தார். பின்னர் மனைவியிடம் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறி தனியார் பரிசோதனை மையத்தில் இருந்து பாசிட்டிவ் ரிப்போர்ட் ஒன்றை வாங்கிவந்து, அதில் இருந்த பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இவரின் பெயரை போட்டு வீட்டில் உள்ள அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
இதனை காரணமாக கூறி அந்த இளைஞன் தான் வேலை பார்க்கும் இடத்திலேயே இருந்து கொள்வதாக கூறியுள்ளார். இருப்பினும் அவருக்கு கொரோனா என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படாத காரணத்தினால் அவரது தந்தை அந்த தனியார் பரிசோதனை மையத்துக்கு சென்று இதுகுறித்து விசாரணை செய்த போது அவர் போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து தனியார் பரிசோதனை மையத்தினர் அந்த இளைஞர் மீது காவல்நிலையத்தில் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அந்த இளைஞருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த விசாரணையில் மனைவியுடன் வாழ பிடிக்காமல் இதுபோன்று செய்ததாக அவர் கூறினார். இந்த சம்பவம் அவரின் தந்தை மற்றும் மனைவிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.