நாமக்கல் மாவட்டத்தில் மலைப்பகுதி கிராமங்களில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பெரப்பஞ்சோலை கிராமம் மலைபகுதியாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவினால் பள்ளிகள் மூடப்பட்டதினால் மாணவ மாணவிகள் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் கல்வி பெற்று வருகின்றனர். இதனையடுத்து முள்ளுக்குறிச்சி பகுதியில் செல்போன் கோபுரம் உள்ள நிலையில் அங்கிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் மட்டுமே சிக்னல் கிடைக்கும்.மேலும் முள்ளுக்குறிச்சியிலிருந்து பெரப்பஞ்சோலை 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் சரியாக பங்கேற்க முடியாததால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பூஸ்டர் வைத்தால் கூட 2 கிலோமீட்டர் அளவிற்கு மட்டுமே சிக்னல் கிடைக்கின்றது. இதனையடுத்து நாமக்கலுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனிடம் அப்பகுதி மக்கள் செல்போன் சிக்னல் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அமைச்சரும் பெரப்பஞ்சோலை பகுதியில் பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் டவர் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது என்றும், கூடிய விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.