கிணற்றில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கோல்காரனுர் காட்டுவளவு பகுதியில் சுப்பிரமணி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு பூபதி என்ற மனைவியும், பிரபாகரன்-ரேவதி என்ற மகனும் மகளும் இருக்கின்றனர். இதில் ரேவதி, பிரபாகரன் இருவரும் சேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிக்கு சொந்தமான விவசாய கிணற்றில் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி பூபதி அருகில் இருப்பவர்களின் உதவியுடன் கணவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து சுப்பிரமணியின் மனைவி பூபதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் “என்னுடைய கணவரிடம் பெரும்பாலானோர் கடன் வாங்கி இருந்ததால் அவர்களில் யாரோ கணவரை தாக்கி கிணற்றுக்குள் தள்ளி விட்டு இருக்கலாம் என்றும் இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்”. அதன்பின் காவல்துறையினர் சுப்பிரமணி இறந்ததை கொலை வழக்காக வழக்குப்பதிவு செய்து யார் யாரெல்லாம் அவரிடம் பணம் வாங்கி இருந்தார்கள் என்ற விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.