மது போதையில் நண்பர்களுக்கு இடையே நடந்த மோதலில் ரவுடியை கத்தியால் சரமாரியாக வெட்டிய அவரருடைய 2 நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் புதுகும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் என்பவர் மீது பல்வேறு கொலை , கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. அத்துடன் இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதைதொடர்ந்து புதுகும்மிடிப்பூண்டியில் தனது வீட்டின் அருகில் உள்ள காலி மைதானத்தில் அவருடைய நண்பர்களான ஜெகன் (28), பிரேம்குமார் (32) மற்றும் கார்த்திக் (28) ஆகியோருக்கு மது விருந்து வைத்துள்ளார்.
அப்போது ரவுடிகளுக்கு போதை அதிகமானதால் அவர்களின் யார் பெரிய ரவுடி என்பதில் பாஸ்கருக்கும் , மற்றொரு ரவுடி ஜெகனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஜெகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாஸ்கரை வெட்டியுள்ளார். இந்த மோதலில் கழுத்து அறுபட்டு தலையில் பலத்த காயத்துடன் இருந்த ரவுடி ரிஸ்க் பாஸ்கர் ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட அவருடைய நண்பர்கள் ஜெகன் ,கார்த்திக் இருவரையும் முதற்கட்டமாக கைது செய்துள்ளனர்.