ஈராக் நாட்டின் அமெரிக்க தூதரக கட்டிடத்தின் மேலே வெடிகுண்டுகளுடன் பறந்துகொண்டிருந்த டிரோனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்க ராணுவத்தினர் வான்வழி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் அந்நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அப்போது முதல் ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைகள் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் மீதும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் அமெரிக்க இராணுவம் ஈரான் ,சிரியா எல்லைப் பகுதியில் ஈரான் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது.
இந்நிலையில் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதலை நடத்தும் முயற்சியில் தீவிரவாதிகள் இரவு நேரத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரோனை பயன்படுத்தி அமெரிக்க தூதரக கட்டிடத்துக்கு மேலே பறக்கவிட்டர். ஆனால் அமெரிக்கத் தூதரக கட்டிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அபாய ஒலியை எழுப்பி எச்சரித்தது. இந்த அபாய ஒலியின் சத்தத்தை கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மேலே பறந்து கொண்டிருந்த டிரோனை உடனடியாக சுட்டு வீழ்த்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கு முன்பு ஈராக் மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவதளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ஆனால் இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.