தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்து ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா உள்ளிட்டவை திறக்கப்பட்டன. இதையடுத்து கூட்டம் குவிந்ததால் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத சுற்றுலா பயணிகளால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தலங்கள் மூடப்படும். ஆனால் கொடைக்கானல் நகருக்கு வர தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் அபாயம் ஏற்படும் என அரசு எச்சரித்துள்ளது.