வாழைமரம் சாகுபடியில் அதிக நன்மை பெறும் வழிமுறைகள் தொடர்பாக வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் சுற்றுவட்டாரத்தில் வாழை மரம் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த வாழை பயிர் பொதுவாக அதிக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவையான ஒரு பயிராக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் நடைமுறை முக்கிய சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை கொடுக்கும் முக்கியத்துவத்தை நுண்ணூட்டச் சத்துக்களுக்கு அளிப்பதில்லை. இதனால் தேவையுள்ள அளவு உரம் போட்ட தோட்டங்களிலும் மரங்களின் வளர்ச்சி குன்றி மகசூல் குறைவதுடன், தர குறைபாடு ஏற்படுகின்றது. ஆகவே இந்த குறைபாடுகளை களைய முக்கிய சத்துக்களுடன் நுண்ணூட்டச் சத்துக்களை சேர்த்து உரிய விகிதத்தில் கொடுப்பதன் மூலம் வாழை தாரின் தரத்தை மேம்படுத்த முடியும்.
இதனையடுத்து தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியின் கண்டுபிடிப்பான “பனானா சக்தி” என பெயரிடப்பட்டுள்ள நுண்ணூட்டச் சத்துக் கலவையை 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் சேர்த்து வடிகட்டி அதனுடன் ஒட்டும் திரவம் சேர்த்து வாழை கன்று நட்ட 3,4,5,6 மற்றும் 7 மாதங்களில் இலைகளில் நன்கு நனையும்படி தெளிப்பதால் வாழைக்கன்று வளர்ச்சி நன்றாக செழித்து வளரும் என்று தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார்தெரிவித்துள்ளார். மேலும் இந்த நுண்ணூட்ட கலவையை கொடுப்பதனால் அதிக எண்ணிக்கை சீப்புகளும், காய்களும் எவ்வித வெடிப்புகளும் இன்றி நல்ல தரத்துடன் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
இதனைத்தொடர்ந்து 5-ம் மாதத்தில் வாழை மரத்திற்கு 20 கிராம் என்ற அளவில் பென்டொனைட் சல்பர் உரத்தை மற்ற உரங்களுடன் கலந்து கொடுப்பதாலும் வாழை தாரின் தரத்தை உயர்த்தலாம் என்றும் வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இவ்வாறு விவசாயிகளுக்கு வாழைத்தார்களுக்கு உரங்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியத்தில் ஒரு எக்டருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கப்படுகின்றது. மேலும் கூடுதலான தகவலுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் எண் 04652-275800 என்ற தொலைபேசி எண்ணிற்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.