மளிகை கடை உரிமையாளரின் வீட்டில் பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோட்டூர்புரம் பகுதியில் இக்பால் என்ற மளிகை கடை உரிமையாளர் வசித்து வருகிறார். இந்நிலையில் இக்பால் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 1/2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 50 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 50 பவுன் தங்க நகை மற்றும் 1 1/2 லட்சம் ரூபாய் பணம் போன்றவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.