இளம்பெண் தங்கையின் கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு, சரண்யா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான மஞ்சுவுக்கு திருமணமாகாத நிலையில், இளைய மகள் சரண்யா தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து சரண்யாவின் கணவரான கார்த்திக் என்பவர் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சரண்யா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கார்த்திக் மோட்டார் சைக்கிளில் மஞ்சுவை கொளத்தூர் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அதன்பின் தங்கையின் கணவர் வீட்டில் மஞ்சு மர்மமான முறையில் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொளத்தூர் காவல்துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கிடம் மஞ்சு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.