கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில் நன்கு பிரசித்தி பெற்ற மாட்டு பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் சுப்பிரமணி என்பவர் பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் சுப்ரமணி பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் திவாகர் என்பவர் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும் போது கோவில் கதவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து திவாகர் அப்பகுதியில் உள்ள கோவில் நிறுவனரிடம் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த கோவிலில் 3 வது முறையாக திருட்டு போயிருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்த போது கதவுகளை எரித்ததோடு உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கைகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.