கொலை முயற்சியில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கான்வெண்ட் பகுதியில் ரோசாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டைட்டஸ் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டைட்டஸ், ஒருவரை கொலை செய்வதற்கு முயற்சித்த போது அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் என்பவர் டைட்டஸ் ஜாமினில் வெளியே சென்றால் தொடர்ந்து இது போன்ற குற்றங்களில் மீண்டும் ஈடுபடுவார் என்பதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளார். அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் என்பவர் டைட்டஸை உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் நகலை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அதனை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.