மேட்டுப்பாளையத்தில் குழந்தையின் உடலில் தடுப்பூசியின் ஒரு பகுதி உடைந்து சிக்கியது.
கோவை மாவட்டம் எம் எஸ் ஆர் புரத்தைச் சேர்ந்த தம்பதிகள் பிரபாகரன் மலர்விழி. இவர்களுக்கு கடந்த 26ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் குழந்தைக்கு தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. அதில் தடுப்பூசியின் ஒரு பகுதி உடைந்து குழந்தையின் உடலிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்பு ஊசியின் உடைந்த பகுதியை மருத்துவர்கள் கண்டறிந்து அகற்றியதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் தலைமை மருத்துவரிடமும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் தமிழக சுகாதார துறை இணை இயக்குனர் கிருஷ்ணா தலைமையிலான மருத்துவகுழு,
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் குழந்தைக்கு ஊசி போடும்போது அருகில் இருந்த மருத்துவர்களையும், செவிலியர்களையும் தனித்தனியாக இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். தற்சமயம் நடந்து வரும் இந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.