ஹைதி நாட்டு அதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கரீபியன் கடலில் பல்வேறு தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. அந்த நாட்டில் இருக்கும் போர்ட்டோ பிரின்ஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில் ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே நேற்று மர்ம கும்பல் ஒன்றால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இக்கோரச் சம்பவத்தில் அவரது மனைவி மார்ட்டின் மாய்சேவும் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ஹைதி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதி செய்ததோடு இது ஒரு இரக்கமற்ற மற்றும் மிருகத்தனமான செயல் என்றும் கூறியுள்ளார்.
இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பு செய்தியாளர் ஜென் சாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு மற்றும் மிக கொடூரமானது. இதற்காக அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அரசாங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு ஹைதி நாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்கப்படும்” என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என ஹைதி நாட்டு இடைக்கால பிரதமர் தெரிவித்துள்ளார்.