ஆட்டோவும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பலியாகி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள அழகம்மாள் புரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெண்களில் சிலர் காளத்திமடத்தி பகுதியில் அமைந்துள்ள ரப்பர் கம்பெனிக்கு வேலைக்காக அதே பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவரின் ஆட்டோவில் செல்வது வழக்கம். இந்நிலையில் ராம்குமார் தனது ஆட்டோவில் கனியம்மாள், ராஜேஸ்வரி, இசக்கியம்மாள், மாலா, ராஜேஸ்வரி, ராதா, முருகன், ஆகியோரை ஏற்றிக்கொண்டு விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேன் ஒன்று பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று திடீரென ராம்குமாரின் ஆட்டோவின் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த டிரைவர் ராம் குமார் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் கனியம்மாள் என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 6 பேரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் உயிரிழந்த கனியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரான அயப்பனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.