கணியம்பாடி வட்டாரத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்திற்ககாக 2 1/4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நெல், உளுந்து, மணிலா, சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றில் மணிலா, உளுந்து ,சோளம் போன்ற பயிர்களுக்கு பாசனம் செய்வதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுகின்றது. இதுபோன்ற பயிர்களுக்கு தண்ணீர் சிக்கனம் ஏற்படும் நேரத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டு கணியம்பாடி வட்டாரத்தில் 435 ஏக்கர் பரப்பில் சொட்டுநீர் பாசன திட்டம் செயல்படுத்த வேளாண்மைத் துறை திட்டமிட்டு அரசு 2 கோடியே 47 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் பயன்படுத்துவதன் மூலம் 70 சதவீத தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
மேலும் நீர்ப்பாசனத்திற்கு மின்சாரம் பயன்பாடும் குறைந்து வருகின்றது. எனவே இந்த திட்டத்தை விவசாயிகள் சரியான முறையில் பயன்படுத்தினால் பயன் பெறலாம் என்று கூறப்படுகிறது. இதில் 5 ஏக்கருக்கு நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், 12.5 ஏக்கர் பரப்பளவு வரை உள்ள இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அரசாங்கம் வழங்குகிறது. ஆகவே இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 2 புகைப்படம் மற்றும் சிறு, குறு விவசாயி சான்று போன்ற ஆவணங்களுடன் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் கணியம்பாடி வேளாண்மை வட்டார விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.