கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 35 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என சுமார் 3 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதிலும் 11 தடுப்பூசி முகாம்கள், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தினசரி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 5-ம் தேதி முதல் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே கர்ப்பிணி பெண்கள் வழக்கமாக பரிசோதனைக்கு செல்லும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. அதன்படி 3 நாட்களில் 35 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் வராமல் இருப்பதனால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது. இதனையடுத்து பாலூட்டும் தாய்மார்கள் 800 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.