வெப்பம் தாங்க முடியாமல் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள் சோர்வுடன் காணப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி திரிகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்துவதற்கு வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாரியப்பன், கலீம், வெங்கடேஷ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தி பிடிக்க முயற்சி செய்த சமயத்தில் பாகுபலி யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் வனத்துறையினர் பாகுபலியை பிடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் முகாமிலிருந்து அழைத்துவரப்பட்ட மாரியப்பன், கலீம் என்ற கும்கி யானைகள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, கும்கி யானைகள் பராமரிக்கப்பட்ட டாப்ஸ்லிப் பகுதியின் காலநிலையும், மேட்டுப்பாளையத்தின் காலநிலையும் வெவ்வேறாக இருப்பதால் 3 கும்கி யானைகள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே உரிய சிகிச்சை அளித்து கும்கி யானைகளை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.