அழகு நிலைய பெண் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கங்காதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியில் கங்காதேவி அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு 8 மணி ஆகியும் அழகு நிலையத்தில் இருந்து கங்காதேவி திரும்பி வராததால் சந்தேகமடைந்த சீனிவாசன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கயிறுகளால் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் பிளாஸ்திரி ஒட்டிய நிலையில் இருந்த தனது மனைவியிடம் சீனிவாசன் விசாரித்த போது மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்து 19 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றதாக தனது கணவரிடம் கங்காதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளிக்க சென்ற சமயத்தில் மன உளைச்சலில் இருந்த கங்காதேவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.