ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 20 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக்கொள்ள இருப்பதால் கடந்த சில வாரங்களாக தலிபான் தீவிரவாதிகளின் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. மேலும் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரைத் தாக்கி நகரங்களை கைப்பற்ற பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அஷ்ரப் கனி தலைமையிலான அரசும் தொடர்ந்து தலிபான் வன்முறையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தாகர் பிராந்தியம் பகுதியில் உள்ள தலுகான் என்ற இடத்தில் தலிபான்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 தலிபான்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலிபான்களின் தாக்குதல்களை பார்த்து அரசு ஒருபோதும் அச்சம் கொள்ளாது என்றும் அவர்களால் அரசை எதிர்த்து எந்த நகரங்களையும் கைப்பற்ற முடியாது என்பதை தெரிவித்துள்ளார்.