தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அமராபுரம் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் 3 வாலிபர்கள் நீண்ட நேரமாக நின்று கொண்டு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை அழைத்து இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு அவர்களை சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மணப்பாடு பகுதியில் வசிக்கும் ரூபன், கார்த்தி முத்து மற்றும் சிவபெருமாள் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அவர்கள் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.