தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்று பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறுவதை நிறைவேற்றும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.