கள்ளக்காதல் தொடர்பில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை பகுதியில் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ராமு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தால் ரேணுகா பதற்றம் அடைந்துள்ளார். இதனையடுத்து ரேணுகா ராமுவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ரேணுகா மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் காவல்கழனி பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் சென்று பார்த்தபோது ராமுவின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் காவல்துறையினர் ராமுவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாலமங்கலம் பகுதியில் வசிக்கும் மணி என்பவரது மனைவியான மகாலட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த ஐந்து வருடங்களாக ராமுவுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இது குறித்து அறிந்த மணி ராமுவையும், மகாலட்சுமியையும் கண்டித்துள்ளார். இருப்பினும் மணியின் பேச்சை இருவரும் கேட்காமல் தொடர்ந்து கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதனால் மணிக்கும் மகாலட்சுமிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த மணி ராமுவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அதன்பின் கள்ளக்காதல் சம்பந்தமாக மணிக்கும், ராமுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மிகவும் ஆத்திரமடைந்த மணி ராமுவை கத்தியால் சரமாரியாக வெட்டி பாழடைந்த கிணற்றுக்குள் கல்லை கட்டி வீசியது தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மணியை கைது செய்ததோடு இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபாகரன், தினேஷ், பூவேந்திரன், ஆகாஷ், வினோத்குமார் மற்றும் ஹரி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.