அரசு விதித்த விலைக்கு அதிகமாக உரகங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைகளுக்கு தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதிகளில் அமைந்திருக்கும் தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு களைக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அப்பகுதியில் திடிரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது பூச்சி மருந்து மற்றும் உரம் விற்பனை பற்றியும், அவற்றின் விலை விபரம் குறித்தும் விவசாயிகளுக்கு தெரியும் வண்ணம் பட்டியல் வைக்கப்பட்டிருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதனை அடுத்து களைக்கொல்லி மருந்து, பூச்சி மருந்தின் இருப்புகள், விவசாயிகளுக்கு விற்பனை செய்த ரசீதுகள் மற்றும் கொள்முதல் பட்டியல் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இடுபொருள்களை விற்பனை செய்யப்படுகின்ற போது விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் எனவும் உரங்களை கண்டிப்பாக அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதில் கூடுதல் விலைக்கு களைக்கொல்லி மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் விவசாயிகள் தாங்கள் வாங்குகின்ற இடுபொருட்களுக்கு ரசீதை கேட்டு வாங்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.