Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

நகை பட்டறையில் உள்ள பீரோவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவில் தனாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள வாரச்சந்தை சாலையில் அடகு கடை, நகை கடை  மற்றும் நகை பட்டறையும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் தனாஜி வழக்கம்போல் இரவு தனது பணிகளை முடித்துவிட்டு கடை மற்றும் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனாஜி அதிகாலை தனது கடைக்கு சென்று பார்த்தபோது பட்டறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தனாஜி கொடுத்த புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நகை பட்டறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 4 1/2 கிலோ வெள்ளி நகைகள், 5 பவுன் நகை, 52 ஆயிரம் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அங்கு துப்புத் துலக்கும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டனர். அப்போது மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்காததால் பின் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்தபகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |