அமெரிக்காவில், டிக்டாக்கில் பிரபலமான 19 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெலவாரே என்ற மாகாணத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் சுவாவி. நடன கலைஞராக இருக்கும் இவருக்கு டிக்டாக்கில் 27 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். இவர் பதிவிடும் வீடியோக்கள் சில 10 கோடிக்கும் மேற்பட்ட லைக்குகளை பெறும்.
இந்நிலையில், இவர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து, அவரின் குடும்பத்தார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “சுவாவி, கொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதால் பிற தகவல்களை தற்போது வெளியிட முடியாது. இது ஆரம்பம் தான். அவர் என்றும் எங்கள் நினைவில் இருப்பார். அவரின் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்கள்.