பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணா சிலை அருகே அமைந்திருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் முன்பு வடக்கு மாவட்ட தலைவரான முருகேசன் முன்னிலையில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் நிரப்பப் படும் எந்திரத்தை கட்டிபிடித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். அதன்பின் இந்தப் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து ஆவுடையார் கோவில் அருகே அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தின் முன்பு நகர தலைவரான பாண்டியன் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவரான கூடலூர் முத்து இருவரின் தலைமையிலும் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கீரனூர், ஆலங்குடி, அண்ணா வாசல், மணமேல்குடி, கீரமங்கலம், அரிமளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.