தமிழகம் முழுவதும் பேருந்துகளில் கூட்டத்தை குறைக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக பேருந்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டு இருந்தது. தற்போது அரசின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதலில் மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, அதில் 23 மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. பின்னர் மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு பேருந்துகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வர உத்தரவிட்டது.
இதனால் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. தமிழகத்தில் தினமும் 400 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பேருந்துகளில் கூட்டத்தை குறைப்பதற்காக, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது தான் தொற்று குறைந்து வருகின்றது. பேருந்துகளில் மக்கள் கூட்டமாக செல்வதால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்பதால், கூட்டத்தை குறைப்பதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.