தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு, கணினி வகுப்பு, ஆங்கில பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்களும், காலணிகள், பைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் சேர்க்கையும் அரசு பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் படித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக அரசு பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இதையடுத்து பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதன் ஒரு முயற்சியாக குன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி பள்ளியில் சேர்ந்த 2 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார்.