நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து மது பார்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் செயல்பட அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் உள் அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 100 பேரும், திறந்த வெளி நிகழ்ச்சிகளில் 20 பேரும் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.