மயான வசதி ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் வாலிபர் உடலோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்கு பின் மணிகண்டனின் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்பின் மணிகண்டனின் உடலை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்சில் உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர். அப்போது மணிகண்டனின் உடலை கல்குடி மயானத்தில் அடக்கம் செய்யக்கூடாது என்று தனிநபர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கல்குடி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மணிகண்டனின் உடலுடன் உறவினர்கள் தங்களுக்கு மயான வசதி வேண்டி வழியிலேயே ஆம்புலன்சை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் சதீஷ் சரவணகுமார் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாமல் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். பின்பு காவல்துறையினர் பொதுமக்களை விலக்கி ஆம்புலன்சை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் பொதுமக்கள் ஆம்புலன்சை விரட்டிச் சென்று கற்களை அடுக்கி வைத்து மறித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் உங்களது கோரிக்கை விரைவாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். அதன்பின் போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் மணிகண்டனின் உடலை ஆம்புலன்சில் தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.