ஹைதி அதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது மனைவி மார்டின் மோயிஸ்-க்கு அந்த சம்பவத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இதையடுத்து அதிபரின் மனைவி மார்டின் மோயிஸ் புளோரிடாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஹைதி நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கிடையே அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் பேரில் 4 பேரை சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டு காவல்துறை உயரதிகாரி லியோன் சார்லஸ் ஹைதி அதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 28 பேர் கொண்ட குழு செயல்பட்டதாகவும், இரண்டு பேர் ஹைதி தீவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், 26 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் இரண்டு அமெரிக்கர்கள், 15 கொலம்பியர்கள் என மொத்தம் 17 பேர் இதுவரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் பாதுகாப்பு படையினர் 3 கொலம்பியர்களை சுட்டு தள்ளியுள்ளனர். மேலும் 8 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்த நாட்டில் அதிபர் கொலை செய்யப்பட்டதையடுத்து தேசிய நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அமைதி காக்குமாறு பிரதமர் கிளாட் ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.