மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியில் விவசாயி அர்ஜூனன்- தேன் நிலா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றார். இந்த தம்பதியினருக்கு ராகவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை இறுதி ஆண்டு பயின்று வந்துள்ளார். இதனையடுத்து ராகவிக்கும் அதே கல்லூரியில் பயின்று வரும் மாணவர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் காதல் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முடிவு எடுத்த நிலையில் ராகவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ராகவியை கட்டாயப்படுத்தி வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தில் வசிக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்த இவரது தாய்மாமன் தியாகராஜன் என்பவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு 2-ம் தாரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
எனவே 2 குழந்தைகளுக்கு தந்தையான தனது தாய் மாமனுடன் வாழ விரும்பாமல் மனமுடைந்த ராகவி கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் தியாகராஜன், பெற்றோர், சகோதரர்கள் என 6 பேர் ராகவியின் சடலத்தை அருகில் உள்ள பள்ளத்தாதனுர் மயானத்திற்கு எடுத்துச் சென்று எரித்து விட்டனர். இந்நிலையில் ராகவி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்து வந்துள்ளனர். இதனைதொடர்ந்து ராகவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சுஜாதா, வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி ராகவியின் தாய்மாமன் தியாகராஜன், பெற்றோர் அர்ஜுனன்-தேன்நிலா, சகோதரர்கள் ராமலிங்கம், ராகுல் மற்றும் இவர்களுக்கு உதவிய மன்னாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாது ஆகிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு திருமணமான 2 மாதத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.