மகன் மீது வயதான தாய் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் கோமளா பாய் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தற்போது வளசரவாக்கத்தில் இருக்கும் முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் மூதாட்டியான கோமளா பாய் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தனக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் எண்ணூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது உடல்நலக்குறைவால் இவரது கணவர் உயிரிழந்ததால் மகனான கமலக்கண்ணனுக்கு அந்த வேலை வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு இவருக்கு சொந்தமான வீட்டை விற்று மூன்று பேருக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்துள்ளார். இதனை அடுத்து நடிகை கே.ஆர்.விஜயா, ராதிகா போன்ற பிரபலங்களின் வீடுகளில் வேலை செய்த பணத்தையும் தனது மகன் கமலக்கண்ணனிடம் கோமளா கொடுத்துள்ளார். ஆனால் கோமளாவின் கணவரின் பெயரில் வரும் பென்சன் பணத்தை தராமல் இருப்பதோடு, மாதம் செலவுக்கு 3000 ரூபாய் மட்டுமே கமலக்கண்ணன் வழங்குகிறார். அதோடு 5 ஆயிரம் ரூபாய் கேட்டால் கமலக்கண்ணன் அதை தர மறுக்கிறார் என கோமளா அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வயதான தாயை பராமரிக்காத குற்றத்திற்காக காவல்துறையினர் கமல கண்ணன் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.