உறவுக்கார வாலிபர் தனது நண்பருடன் இணைந்து ஹைகோர்ட் வழக்கறிஞரிடம் 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரியும் ராஜேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவரது மகன் இறந்துவிட்டதால் தம்பதியினர் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது வீட்டின் முதல் மாடியில் இருக்கும் ஒரு அறையில் ராஜேஷ்வரன் மனைவியின் தங்கை மகனான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் ராஜேஸ்வரனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் உறவுக்காரரான சண்முகத்தை கடத்தி மாமல்லபுரத்தில் இருக்கும் தனியார் விடுதியில் அடைத்து வைத்து உள்ளோம் எனவும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் அவரை அனுப்புவோம் எனவும் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த மர்மநபர் சண்முகத்தின் கைகளை கட்டி வைத்துள்ளது போன்றும், சண்முகத்தின் முகத்தில் மர்ம நபர் காலால் மிதிப்பது போன்றும் 2 புகைப்படங்களை ராஜேஸ்வரனின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து ராஜேஸ்வரன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து ஆராய்ந்ததில் அவர் வண்டலூரில் இருந்து பேசியது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது சண்முகமும், அவரது நண்பரும் குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளனர். அதன் பின் இருவரையும் கைது செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜேஷ்வரனின் மகன் இறந்ததற்கான இன்சூரன்ஸ் பணம் 20 லட்ச ரூபாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தது சண்முகத்திற்கு தெரியவந்துள்ளது. இதனால் அந்த பணத்தை அபகரிப்பதற்காக தனது நண்பருடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.