நூதன முறையில் வாலிபரிடம் மோசடி செய்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லிகேணியில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தினேஷுக்கு சையது பக்ருதீன், முகமது மானஸ் மற்றும் மீரான் மொய்தீன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இவர்கள் 3 பேரும் இணைந்து ஷேர் மீ என்ற செல்போன் செயலியில் வரும் வீடியோக்களை லைக் செய்து “ஸ்க்ரீன் ஷாட்” எடுத்து அனுப்பினால் 50000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று தினேஷிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு முதற்கட்டமாக 30000 ரூபாய் கட்ட வேண்டும் என்று கூறியதால் தினேஷ் அதனை நம்பி அவர்கள் 3 பேரிடமும் பணத்தை கொடுத்துள்ளார்.
அதன் பிறகு அவர்கள் குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ளனர். இதனையடுத்து அதில் வரும் வீடியோக்களை லைக் செய்து, ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பிய சிறிது நேரத்திலேயே அந்த செயலி சரிவர செயல்படவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ் அவர்கள் 3 பேர் மீதும் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீரான் மொய்தீன், முகமது மற்றும் சையது பக்ருதீன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.