லாரி சக்கரத்தில் சிக்கி தலைமையாசிரியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவெண்ணெய்நல்லூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கர் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர் பிடாகம் குச்சிபாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி இவரின் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றுள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த சிவசங்கர் லாரியின் பின்பக்க டயரில் சிக்கியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் லாரி டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.